இந்திய அணியின் நிர்வாகத்தில் சேவாக்கிற்கு கிடைக்கப்போகும் மாபெரும் பதவி
இந்திய கிரிக்கெட் அணி ரோகித் சர்மாவின் தலைமையில் கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷித் தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த பின்னர் நாடு திரும்பியது. அடுத்ததாக இந்திய அணி இம்மாதம் ஜூலை முதல் வாரத்தில் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்படி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஐந்து இருபதுக்கு20 போட்டிகள் கொண்ட தொடர் என மிகப் பெரிய தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
மேலும் குறித்த தொடருக்கான இந்திய அணியில் பல வீரர்களில் மாற்றங்கள் கொண்டுவருதற்கு இணக்கம் தெரிவித்து அது தொடர்பான காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வரவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படி இந்திய அணியில் ஏற்படும் அதிரடி மாற்றம் நிகழ்த்தப்பட இருக்கும் அதேவேளையில் இந்திய அணியின் தேர்வு குழுவிலும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இருக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு உறுப்பினராக இருந்த சேத்தன் சர்மா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிசிசிஐ-யால் அதிரடியாக பணி நீக்கப்பட்டதால் தற்போது தற்காலிக குறித்த தேர்வுக்குழு தலைவராக ஷிவ் சுந்தர் தாஸ் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அவர் விரைவில் அந்த பதவியில் இருந்து விலக உள்ளதாகவும், புதிய தலைமை தேர்வுக்குழு தலைவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ குழுமம் திட்டம் தீட்டி சரியான நபரை தேர்ந்தெடுக்கும் களத்தினை வகுத்துள்ளதாக தெரிகிறது. குறித்த வகையில் தேர்வுக்குழு தலைவராக ஒருவரையும் அவரின் கீழ் ஐந்து உறுப்பினர்களையும் கொண்ட குழுவை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளது. மேலும் இந்த தேர்வுக்குழு தலைவரானவர் வடக்கு மண்டலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் பி.சி.சி.ஐ விரும்புவதாக கருத்துக்கள் கசிந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த புதிய தேர்வுக்குழு தலைவருக்கான போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான விரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், நெஹ்ரா, யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய கட்டுபாட்டு வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சேவாக்கிற்கு அதிக ஆதரவுள்ளதால் அவரே புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.