சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலக கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. என்ன தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் வந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை நிர்ணயிக்கும் இந்த தொடருக்கு அன்றும் இன்றும் தனித்துவமான தரமும் ரசிகர்களிடம் குறையாத மவுசம் இருக்கிறது. அதனால் உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன.
மேலும் 1987, 2011 ஆகிய வருடங்களில் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து இதுதொடரை நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இம்முறை முழுவதுமாக தங்களது சொந்த மண்ணில் நடத்துகிறது. அதனால் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல சாம்பியன் பட்டம் என்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களின் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அந்த நிலையில் இத்தொடருக்கான முழுமையான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அரையிறுதி விதிமுறை:
அதன் படி அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியுடன் துவங்கும் இத்தொடரில் இந்தியா அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சேப்பாக்கத்தில் தன்னுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. மேலும் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறுகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 1 முறை மோத வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெறும் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அதில் புள்ளி பட்டியலில் 1 மற்றும் 4வது இடத்தை பிடிக்கும் அணிகள் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் இருக்கும் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதியில் மோத உள்ளன. அதே போல புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
ஆனால் அதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு மட்டும் ஐசிசி பிரத்தியேகமான விதிவிலக்கு கொடுத்துள்ளது. அதாவது பொதுவாக உலகக் கோப்பையை நடத்தும் நாடு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் அந்தப் போட்டியை எந்த மைதானத்தில் விளையாடலாம் என்பதை தேர்வு செய்வதற்கான ஸ்பெஷல் உரிமையை ஐசிசி கொடுத்துள்ளது. சொல்லப்போனால் கடைசியாக இந்திய மண்ணில் நடைபெற்ற 2016 டி20 உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா தன்னுடைய அரையிறுதி போட்டியை மும்பை அல்லது டெல்லி ஆகிய மைதானங்களில் ஒன்றில் விளையாடும் முடிவை தேர்வு செய்யும் வாய்ப்பை பெற்றது.
அதில் மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்தில் விளையாடுவதை தேர்வு செய்த இந்தியா இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றது. அந்த வரிசையில் இந்த உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றால் மும்பை அல்லது கொல்கத்தா ஆகியவற்றில் தாங்கள் விரும்பும் மைதானத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த மைதானம் இந்தியாவுக்கு மிகவும் பிடித்த ராசியான மும்பையாகவே இருக்கும் என்று 100% சொல்லலாம்.
இருப்பினும் அந்த போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது மும்பையில் நடைபெறாது. ஏனெனில் பாதுகாப்பு காரணங்களுக்காக மும்பையில் விளையாட விரும்பவில்லை என்று ஐசிசியிடம் ஸ்பெஷல் அனுமதியை வாங்கியுள்ள பாகிஸ்தான் ஒருவேளை தங்களது அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றால் அதை கொல்கத்தாவில் நடத்தும் உரிமையை வாங்கியுள்ளது. அதனால் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் நிலைமை வந்தால் அது மும்பைக்கு பதில் கொல்கத்தாவில் நடைபெறும்.