2023 உ. கோ : மண்ணோடு மண்ணான மாபெரும் வெ.இ சரித்திரம், கத்துக்குட்டியை விட படுமோசம் – உலக ரசிகர்கள் சோகம், காரணம் இதோ
சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் தொடரை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உள்ளிட்ட டாப் 10 கிரிக்கெட் அணிகள் ஏற்கனவே சூப்பர் லீக் சுற்றின் வாயிலாக நேரடியாக தகுதி பெற்ற நிலையில் கடைசி 2 அணிகளை தீர்மானிக்கும் குவாலிபயர் தொடர் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற அந்த தொடரில் முதலில் நடைபெற்ற லீக் சுற்றின் முடிவில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றன.
குறிப்பாக சொந்த மண்ணில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்ற 4 போட்டிகளிலும் 4 வெற்றிகளை சுவைத்து முதல் அணிகளாக தகுதி பெற்றன. ஆனால் 1975, 1979 ஆகிய வரலாற்றின் முதல் 2 உலகக் கோப்பைகளை வென்ற வெஸ்ட் இண்டீஸ் 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்விகளை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் தடுமாறி சூப்பர் 6 சுற்றுக்கு பெற்றது. குறிப்பாக ஜிம்பாப்வேவிடம் தோற்று நெதர்லாந்து போன்ற கத்துக்குட்டியிடம் 374 ரன்கள் அடித்தும் சூப்பர் ஓவரில் தோற்றது வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சரிந்த சரித்திரம்: அந்த நிலைமையில் துவங்கிய சூப்பர் 6 சுற்றில் ஜூலை 1ஆம் தேதி நடைபெற்ற தன்னுடைய முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை கட்டாயம் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸ் எதிர்கொண்டது. ஆனால் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் 0, சமர் ப்ரூக்ஸ் 0, பிரண்டன் கிங் 22, கெய்ல் மேயர்ஸ் 5, கேப்டன் ஷாய் ஹோப் 13, நிக்கோலஸ் பூரான் 21 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் கொஞ்சமும் பொறுப்பின்றி சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 81/6 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணியை 7வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முடிந்தளவுக்கு காப்பாற்ற போராடிய ஜேசன் ஹோல்டர் 45 ரன்களும் ரொமாரியா செபார்ட் 36 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 43.5 ஓவரிலேயே 181 ரன்கள் மிரட்டலாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டிய ஸ்காட்லாந்து சார்பில் அதிகபட்சமாக மெக்முலன் 3 விக்கெட்டுகளும் கிறிஸ் சோல், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
அதை தொடர்ந்து 182 ரன்களை துரத்திய ஸ்காட்லாந்து அணிக்கு முதல் பந்திலேயே மெக்பிரைட் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றினாலும் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 30 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 125 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த ப்ரெண்டன் மெக்முலன் 69 ரன்கள் குவித்து அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த ஜார்ஜ் முன்சி 18 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் அசத்திய மேத்தியூ க்ராஸ் அரை சதமடித்து 74* ரன்களும் கேப்டன் பேரிங்டன் 13* ரன்களும் எடுத்தனர்.
அதனால் 43.3 ஓவரிலேயே 185/3 ரன்கள் எடுத்த ஸ்காட்லாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. மறுபுறம் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 6 சுற்றில் தன்னுடைய கடைசி 2 போட்டிகளில் வென்றாலும் ஃபைனலுக்கு தகுதி பெற முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக 2023 உலக கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
குறிப்பாக 1975 முதல் சுமார் 50 வருடங்கள் வரலாறு கொண்ட உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் ஒரு தொடரின் முதன்மை சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. 1975, 1979 ஆகிய அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று 80களில் உலக கிரிக்கெட்டை அடக்கி ஆண்ட வெஸ்ட் இண்டீஸ் 21ஆம் நூற்றாண்டில் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் கத்துக்குட்டியாக மாறி வந்தது.
அதிலும் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் முதல் முறையாக இதே போல் முதன்மை சுற்றுக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் 2022 டி20 உலக கோப்பையிலும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. தற்போது 2023 உலக கோப்பையிலும் வெளியேறியுள்ளதால் வெஸ்ட் அணியின் மாபெரும் சரித்திரம் சுக்கு நூறாக உடைந்து மண்ணோடு மண்ணாக மாறியுள்ளது மொத்த உலக ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.