Cricket

வீடியோ : சேண்ட் பேப்பர் எடுத்துட்டு வரலையா? ஆஷஸ் கெளரவதுக்காக நேருக்கு நேராக மோதிகொண்ட இங்கிலாந்து – ஆஸி பிரதமர்கள்

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் இந்த அதிரடி ஆட்டத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு பழைய ஸ்டைலில் விளையாடி 22 வருடங்களாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் ஆஷஸ் கௌரவத்தை காப்பாற்றுமாறு நாசர் ஹுசைன் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இருப்பினும் பாகிஸ்தானை 3 – 0 (3) என்ற கணக்கில் வீழ்த்தியதைப் போல நிச்சயம் இத்தொடரையும் 3 – 1 (5) என்ற கணக்கில் வெல்வோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்த பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து 3வது போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து ஆஷஸ் கௌரவத்தை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. முன்னதாக இத்தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் கேமரூன் கிரீன் வீசிய ஓவரின் கடைசி பந்தை அடிக்காமல் விட்ட ஜானி பேர்ஸ்டோ எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனடியாக வெளியேறினார்.

அப்போது பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்தது போட்டியில் திருப்பு முனையாக அமைந்து இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமானது. குறிப்பாக பந்தை எதிர்கொண்டு முடித்து விட்டேன் என்பதை உணர்த்துவதற்காக வெள்ளை கோட்டுக்குள் காலால் குறியிட்டு ஜானி பேர்ஸ்டோ வெளியே சென்றதை கருத்தில் கொண்டு நியாயத்துடன் செயல்பட வேண்டிய ஆஸ்திரேலியா நேர்மைக்கு புறம்பாக செயல்பட்டதாக இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் விமர்சித்தனர்.

மேலும் உஸ்மான் கவாஜா போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்த போது லார்ட்ஸ் மைதான உறுப்பினர்கள் சட்டையை பிடிக்காத குறையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிய சர்ச்சையாக மாறியது. அந்த நிலையில் இப்படி ஒரு வெற்றி தேவையா? என்று விமர்சித்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தாங்களாக இருந்தால் பேட்ஸ்மேனை திரும்ப அழைத்திருப்போம் என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதற்கு விதிமுறைகள் தெரியாத குழந்தைகளைப் போல் பேசாமல் வாயில் பால் டப்பாவை வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்தினரை கிண்டலடித்தனர்.

அதற்கு பதிலடியாக பேர்ஸ்டோவை அவுட்டாக்கிய அலெக்ஸ் கேரி லீட்ஸ் நகரில் இருக்கும் ஒரு சலூன் கடையில் முடி வெட்டிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றதாக இங்கிலாந்தின் பிரபல சன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு விமர்சித்தது. ஆனால் தங்களுடன் இருந்த அலெக்ஸ் கேரி முடி வெட்டவில்லை என்பதை உறுதி செய்வதாக தெரிவித்த ஸ்டீவ் ஸ்டீவ் பொய்யான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று பதிலடி கொடுத்தார். அப்படி களத்திற்கு வெளியேயும் அனல் பறந்து வரும் ஆஷஸ் தொடரில் தற்போது உச்சகட்டமாக இரு நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் ஒருவருக்கொருவர் கலாய்த்து மோதிக் கொண்டுள்ளனர்.

அதாவது லித்துனியாவில் 2023 நாட்டோ உலக மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் இரு நாடுகளுக்கிடையேயான நட்பு பற்றி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பென்ஸி ஆகியோர் விவாதித்தனர். அந்த விவாதத்தின் முடிவில் ஆஷஸ் தொடரில் இப்போதும் நாங்கள் தான் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறோம் என்ற வாசகத்தை காட்டி ஆஸ்திரேலிய பிரதமர் அல்பென்ஸி கிண்டலை துவக்கினார். அதற்காக சிரித்த ரிஷி 3வது போட்டியில் வென்ற புகைப்படத்தை காட்டி அவருக்கு பதிலடி கொடுத்தார்.

அதற்கு அசராத அல்பென்ஸி 2வது போட்டியில் ஜானி பேர்ஸ்டோ வெளியேறிய புகைப்படத்தை காட்டி மீண்டும் வம்பிழுத்தார். ஆனால் அதற்கு நான் “சேண்ட் பேப்பர்” கொண்டு வரவில்லை என்று பதிலளித்த ரிஷி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை பதிலடியாக ஆஸ்திரேலிய பிரதமருக்கு கொடுத்தார். மொத்தத்தில் ஜாலியாக நடந்த அந்த சந்திப்பின் முடிவில் இருவரும் கை கொடுத்துக் கொண்ட நிலையில் இந்த ஆஷஸ் தொடரின் அடுத்த போட்டி வரும் ஜூலை 19ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button