முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்ததால் ஏறக்குறைய ஓராண்டு சர்வதேச டென்னிஸ் விளையாடவில்லை. பிரிஸ்பேன் டென்னிஸ் மூலம் மறுபிரவேசம் செய்த அவர் கால்இறுதியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்சனிடம் தோற்று வெளியேறினார்.
இந்த ஆட்டத்தின் போது 37 வயதான நடால் மீண்டும் காயத்தில் சிக்கினார். பரிசோதனையில் தசைநாரில் மிக நுண்ணிய கிழிவு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் வருகிற 14-ந்தேதி மெல்போர்னில் தொடங்கும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து நடால் கூறுகையில் ‘நல்லவேளையாக ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்தில் பிரச்சினை இல்லை. ஆனாலும் தற்போது 5 செட் வரை தாக்குப்பிடித்து விளையாடும் அளவுக்கு தயாராக முடியாது. அதனால் தாயகம் திரும்பி, எனது டாக்டரை கலந்தாலோசித்து சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க உள்ளேன். உற்சாகமான ஆதரவு அளிக்கும் மெல்போர்ன் ரசிகர்கள் முன் விளையாட இயலாமல் போவது வருத்தம் அளிக்கிறது’ என்றார். 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நடால், 2009, 2022-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.